தமிழ்நாடு

புலிக்கு பல் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினரை காணலாம்.

வால்பாறை அருகே வேட்டை பயிற்சி அளிக்கப்பட்ட புலிக்கு பல் அறுவை சிகிச்சை

Published On 2022-09-20 04:01 GMT   |   Update On 2022-09-20 04:01 GMT
  • புலியை கூண்டுக்குள் விட்டு அது வேட்டையாடுவதற்காக கோழி, முயல் போன்றவற்றை விட்டு வேட்டை பயிற்சி அளித்தனர்.
  • அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவ குழுவினர் புலியின் உடல்நிலையை சிறப்பாக கண்காணித்து வருகின்றனர்.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முடீஸ் பஜார் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உடல் நலமில்லாத நிலையில் புலிக்குட்டி ஒன்று நடமாடியது.

இதுபற்றி அறிந்ததும் மானாம்பள்ளி வனத்துறையினர் வனக்குழுவினருடன் இணைந்து அந்த புலிக்குட்டியை பிடித்தனர். பின்னர் புலிக்குட்டியை அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் இருக்கும் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு மற்றும் மீட்பு மையத்தில் வைத்து பராமரித்து வந்தனர்.

மேலும் அங்கு வைத்து புலிக்குட்டிக்கு மருத்துவ சிகிச்சையும் அளித்து வந்தனர். ஆனால் அங்கு வைத்து பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் புலியை மானாம்பள்ளி வனப்பகுதியில் உள்ள வனத்துறையினர் தங்கும் விடுதிக்கு கொண்டு சென்று பாதுகாத்து வந்தனர்.

இந்த நிலையில் புலியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து புலிக்கு தானாகவே வேட்டையாடி சாப்பிடுவதற்கு தேவையான பயிற்சிகளை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதற்காக தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக மந்திரிமட்டம் என்ற பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கூண்டு அமைக்கப்பட்டது.

புலியை கூண்டுக்குள் விட்டு அது வேட்டையாடுவதற்காக கோழி, முயல் போன்றவற்றை விட்டு வேட்டை பயிற்சி அளித்தனர். புலியும் அவைகளை வேட்டையாடி சாப்பிட்டு வந்தது.

இதற்கிடையே புலியின் உடல்நிலையை கால்நடை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது புலிக்கு பல் வலி மற்றும் பல் ஈறுகளில் தொற்று இருப்பது தெரியவந்தது.

உடைந்த பல் துண்டு ஒன்று ஈறுகளில் சிக்கியிருந்ததும் தெரியவந்தது. இதனால் அந்த பல் துண்டை அகற்றுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி முதன்மை வனவிலங்கு பாதுகாவலர் உத்தரவின் பேரில் வண்டலூர் உயிரியல் பூங்கா, கால்நடை டாக்டர் ஸ்ரீதரன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை டாக்டர் விஜயராகவன், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கால்நடை டாக்டர் சதாசிவம், டாக்டர்கள் கோபிகிருஷ்ணா, ஞானவிபாக்கியம் ஆகியோர் அடங்கிய கால்நடை மருத்துவ குழுவினர் 5 மணி நேரத்திற்கு மேலாக புலிக்கு அறுவை சிகிச்சை செய்து உடைந்த பல் துண்டு அகற்றப்பட்டு அந்த இடத்தில் பையோன்டென்டைன் கொண்டு அடைக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவ குழுவினர் புலியின் உடல்நிலையை சிறப்பாக கண்காணித்து வருகின்றனர். தொடர் கண்காணிப்புக்கு பிறகு மீண்டும் உடல்நிலை மற்றும் பல பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் புலியை கூண்டில் விடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags:    

Similar News