தமிழ்நாடு

கொந்தகை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சூதுபவளம் மணிகளை காணலாம்.

கீழடி அகழாய்வில் பவள மணிகள் கண்டெடுப்பு: 2,500 ஆண்டுகள் பழமையானது

Published On 2023-09-25 03:20 GMT   |   Update On 2023-09-25 03:20 GMT
  • கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.
  • தாழியின் உள்ளே 2 சூதுபவள மணிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வுப் பணி கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடங்கி நடந்து வருகிறது. கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் இதுவரை 8 கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்து இருக்கின்றன.

இதில் மத்திய தொல்லியல் துறை தரப்பில் 3 முறையும், தமிழக தொல்லியல் துறை சார்பில் 5 முறையும் அகழாய்வு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த 8 கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான தொல் பொருட்களை மக்கள் பார்க்கும் வகையில் கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் ரூ.18 கோடியே 46 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி, கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களில் இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

இதில் தொல்லியல் துறை இணை இயக்குனரும், கீழடி இயக்குனருமான ஆர்.சிவானந்தம், தொல்லியல் அலுவலர் காவியா ஆகியோர் தலைமையில் கொந்தகையில் நடைபெற்று வரும் 4-வது கட்ட அகழாய்வில், 'இசட்.கியூ.3' என்ற அகழாய்வு குழியில் 46 செ.மீ. ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது. இது கருப்பு, சிவப்பு நிற வகையை சார்ந்தது.

அந்த தாழியின் உள்ளே 2 சூதுபவள மணிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்த 2 மணிகளும் பீப்பாய் வடிவில் சராசரியாக 1.3 செ.மீ. நீளத்திலும், 2.3 செ.மீ. விட்டத்திலும் இருக்கிறது. அதில் ஒரு மணியில் அலை முறை மற்றும் வட்டக்கோடுகளுடன் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது.

வழக்கமாக அகழாய்வில் கண்டெடுக்கப்படும் கண்ணாடி மணிகள், பாசி மணிகள், கல் மணிகள் வரிசையில் சூதுபவள மணிகளும் கிடைத்து வருகின்றன. ஏற்கனவே கொந்தகையில் 3-ம் கட்ட அகழாய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இதேபோல் 74 சூதுபவளம் மணிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சங்க காலத்தில் சூதுபவளம் மணிகள் அழகு பொருட்கள் மற்றும் அணிகலன்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாக பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள்தான் இதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கண்டெடுக்கப்பட்ட சூதுபவளம் மணிகள் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News