தமிழ்நாடு
தமிழக அரசு, உயர்நீதிமன்றம்

மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை- கோட்டாட்சியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

Published On 2022-05-04 20:21 GMT   |   Update On 2022-05-04 20:21 GMT
தமிழகம் முழுவதும் மூத்த குடிமக்கள் கொடுத்த புகார்களின் எண்ணிக்கை, அவற்றின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை:

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 66) என்பவர் தன் மகனுக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தார்.  

தனது மகன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதில் அவர் கூறியிருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றம் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் கடந்த ஆண்டு புகார் கொடுத்துள்ளார், ஆனால் இதுவரை ஏன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 

தமிழகம் முழுவதும் மூத்த குடிமக்கள் கொடுத்த புகார்களின் எண்ணிக்கை, அவற்றின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  

தமிழகம் முழுவதும் மூத்த குடிமக்கள் அளித்த 292 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்றும்,  மூத்த குடிமக்கள் சட்டத்தின்படி அளிக்கப்படும் புகார்களின் மீது 90 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு நடவடிக்கை எடுக்காத கோட்டாசியர்கள்தான் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எச்சரித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News