தமிழ்நாடு
தஞ்சை தேர் விபத்து

தஞ்சை தேர் விபத்து- முழுமையான விசாரணைக்கு பிறகே அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்- அதிகாரி குமார்ஜெயந்த்

Published On 2022-05-01 10:28 GMT   |   Update On 2022-05-01 10:28 GMT
தஞ்சை அடுத்த களிமேட்டில் நடந்த தேர் விபத்து தொடர்பாக முழுமையான விசாரணைக்கு பிறகு தான் அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்று ஒரு நபர் விசாரணை குழு அலுவலர் குமார்ஜெயந்த் கூறினார்.
தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த களிமேட்டில் நடந்த தேர் மின் விபத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்தனர். 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை குழு அலுவலர் குமார்ஜெயந்த் நேற்று முதல்கட்ட விசாரணை நடத்தினார். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரித்து பல்வேறு தகவல்களை திரட்டினார். மேலும் காயம் அடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.

இந்நிலையில் இன்று 2வது நாளாக மீண்டும் களிமேட்டுக்கு சென்று விபத்தில் சிக்கி எரிந்து காட்சியளிக்கும் தேரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தேர் எந்த அளவுக்கு சேதமாகி உள்ளது என்ற தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டு குறித்து கொண்டு பொதுமக்கள் சிலரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

களிமேடு தேர் விபத்து தொடர்பாக இதுவரை மின்வாரியம் உள்ளிட்ட 8 துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. மேலும் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து 12 பேர் விபத்து தொடர்பான தகவல்களை என்னிடம் நேரடியாக தெரிவித்துள்ளனர். இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தகவல் தெரிவிக்கலாம் என கூறியிருந்தேன். ஆனால் யாரும் வரவில்லை.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள், டிஸ்ஜார்ஜ் ஆன பிறகு, அவர்களிடம் தனியாக விசாரிக்கப்படும். முழுமையான விசாரணைக்கு பிறகு தான் அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும்.

நேற்று நாகை மாவட்டம் திருச்செங்காட்டாங்குடியில் சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி தீபராஜன் என்ற தொழிலாளி இறந்தார். அது குறித்து விசாரிப்பதற்காக இன்று தஞ்சையில் இருந்து திருச்செங்காட்டாங்குடிக்கு செல்ல உள்ளேன். அங்கு நடந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்களிடம் விசாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டி முடிந்ததும் அதிகாரி குமார்ஜெயந்த் தஞ்சையில் இருந்து நாகைக்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News