தமிழ்நாடு
வருவாய்துறை செயலாளர் குமார்ஜெயந்த் தலைமையில் தேர் விபத்து தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் பலி- ஒரு நபர் குழு விசாரணை தொடங்கியது

Published On 2022-04-30 09:09 GMT   |   Update On 2022-04-30 09:09 GMT
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர் விபத்து தொடர்பாக வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆலோசனை நடத்தினார்.
தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள களிமேட்டில் கடந்த 27ந் தேதி நள்ளிரவில் அப்பர்சாமி தேர் திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் தேர் நிலைக்கு வரும்போது தேரின் உச்சிப்பகுதி உயர்அழுத்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் இறந்தனர். பலத்த காயம் அடைந்த 17 பேர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து இறந்தவர்கள் உடலுக்கு மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண நிதி வழங்கினார். மேலும் காயம் அடைந்நவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வருவாய்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி இன்று மதியம் வருவாய்துறை செயலாளர் குமார்ஜெயந்த் தஞ்சை வந்தார். பின்னர் அவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர் விபத்து தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தி தகவல்களை குறித்து கொண்டார்.

இதனை தொடர்ந்து சம்பவம் நடந்த இடமான களிமேட்டுக்கு வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் சென்றார். உடன் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா மற்றும் மாவட்ட அதிகாரிகளும் வந்தனர்.

முதலில் தீயில் கருகிய தேரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர் எந்த அளவுக்கு சேதமாகி உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை குறிப்பெடுத்தனர். பின்னர் சாலையில் இருந்து உயர்அழுத்த மின்கம்பி எந்த உயரத்தில் செல்கிறது? என அளவீடு செய்து தேரை நிலைநிறுத்தும்போது எப்படி உச்சிப்பகுதி மின்னழுத்த கம்பியில் பட்டது என்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விபத்து நடந்தபோது எந்த மாதிரியான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்பு துறை உடனடியாக வந்து மீட்பு நடவடிக்கை மேற்கொண்டனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை திரட்டினர். தொடர்ந்து அந்த குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழுமையாக விசாரணை முடிந்த பின்னர் அதன் விவரங்களை அறிக்கையாக தமிழக அரசிடம் சமர்பிப்பர். அதன் அடிப்படையில் அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்.


Tags:    

Similar News