தமிழ்நாடு
திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியைகளிடம் அதிகாரிகள் விசாரணை

மாணவியை மதமாற்றம் செய்ய முயன்றதாக புகார்- திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியைகளிடம் அதிகாரிகள் விசாரணை

Published On 2022-04-20 05:42 GMT   |   Update On 2022-04-20 05:42 GMT
திருப்பூர் அரசு பள்ளியில் மாணவியை மதமாற்றம் செய்ய முயன்றதாக வந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியைகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் ஜெய்வாய்பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நெற்றியில் திருநீறு பூசியும், கழுத்தில் ருத்திராட்சம் அணிந்தும் பள்ளிக்கு சென்றுள்ளார். இதற்கு பள்ளியில் உள்ள 2 ஆசிரியைகள் திருநீறு பூசுவதை பற்றியும், ருத்திராட்சம் அணிவது பற்றியும் விமர்சித்ததுடன், ஒரு மத கடவுளின் பெயரை கூறி அவரை வழிபட வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் தலைமையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். அதில், பள்ளியின் 6ம் வகுப்பு ஆசிரியைகள் 2 பேர் மாணவியிடம் ஒரு கடவுளின் பெயரை கூறி அவரை துதிக்க வேண்டும் என்றும், நெற்றியில் திருநீறு பூசியதை விமர்சித்தும் பேசியுள்ளனர். மாணவியை ஒருமையில் பேசி மிரட்டியுள்ளனர்.

இதனால் மாணவி மனஉளைச்சலுக்கு ஆளாகி பள்ளிக்கு செல்ல பயப்படுகிறாள். மத உணர்வை புண்படுத்திய ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த புகார் தொடர்பாக வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியைகளிடம் கல்வி அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவுக்கு பிறகு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை அதிகாரி ரமேஷ் தெரிவித்தார்.
Tags:    

Similar News