தமிழ்நாடு
பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து கையசைத்த காட்சி.

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை- பிரேமலதா விஜயகாந்த் தாக்கு

Published On 2022-02-17 04:10 GMT   |   Update On 2022-02-17 04:10 GMT
தி.மு.க.வை எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத ஆட்சியாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
கோவை:

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவையில் பிரசாரம் மேற்கொண்டார். மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து குறிச்சி பகுதியில் வாக்கு சேகரித்தபோது அவர் கூறியதாவது:-

கோவையில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய அமைச்சரும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதில் தான் போட்டி போட்டு வருகின்றனர். மக்களுக்கோ, கோவைக்கோ ஏதேனும் நல்லது செய்வார்களா? என்றால் இல்லை.

டிபன் பாக்ஸ் அளிப்பது, அதற்குள் பணத்தை வைத்து அளிப்பது, குடோனில் பதுக்கி வைத்து அளிப்பது என மக்களை ஏமாற்றி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் அவர்கள் அளிக்கும் தொகை இன்று ஒருநாள் செலவுக்கு போதாது.

மக்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 2 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு இல்லை. வருமானம் இல்லை. வறுமையின் உச்சத்தில் மக்கள் உள்ளனர். இதை அவர்கள் இன்று சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வாக்குக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை தான் ஊக்கப்படுத்து கிறார்களே தவிர வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என கேள்வி கேட்டால் அதற்கு பதில் இல்லை. இப்படி தருபவர்களிடம் மக்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறப் போகின்றனரோ, தெரியவில்லை. ஓட்டுக்கு காசு தருபவர்கள் பின் மக்கள் செல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகி விட்டன. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத ஆட்சியாகத் தான் மக்கள் இதை பார்க்கிறார்கள்.

மகளிருக்கு மாதம் ரூ.1000 அளிப்போம் என்றனர். அதை அளிக்கவில்லை. நீட் தேர்வு ரத்து, நகைக்கடன் தள்ளுபடி என எதையும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News