தமிழ்நாடு
புத்தளத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்.

குமரி மாவட்டத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்- 3 குழுக்களாக சென்று கணக்கெடுப்பு

Published On 2022-01-29 04:37 GMT   |   Update On 2022-01-29 04:37 GMT
குமரி மாவட்டத்திற்கு தற்போது வழக்கத்தை விட அதிகமான பறவைகள் வந்துள்ளதால் இனப்பெருக்கங்களும் அதிகரித்துள்ளது. வேட்டையாடுதல் போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளது என்று வனத்துறை அதிகாரி கூறினார்.
நாகர்கோவில்:

தமிழகம் முழுவதும் பறவைகள், வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் கடலோர பகுதி மற்றும் குளம் சார்ந்த பகுதிகளில் பறவைகளை கணக்கெடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து கடல் சார்ந்த பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடந்தது. 3 குழுக்களாக பிரிந்து சென்று கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

ஒவ்வொரு குழுவிலும் வன அலுவலர்கள், பறவை ஆர்வலர்கள் இடம் பெற்றிருந்தனர். புத்தளம், உப்பளம் பகுதியில் ஒரு குழுவினர் ஆய்வு பணியை மேற்கொண்டனர். பைனாகுலர் மூலமாக பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது.

அந்த பகுதியில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் இருந்தது தெரிய வந்தது. பூ நாரை, உள்ளான், ஊசிவால் வாத்து, நத்தை கொத்தி வாத்து, கர்கனி, பெலிக்கான், வர்ணநாரை உள்பட பல்வேறு வகையான பறவைகள் இருந்தது தெரிய வந்தது.

மணக்குடி காயல், ராஜாக்கமங்கலம் பகுதியில் இன்னொரு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு குஜராத் மற்றும் இந்திய துணை கண்ட பகுதிகளான இலங்கை, பாகிஸ்தானில் இருந்து வந்த பறவைகளும் இருந்தது.

ஷாவலர், தங்கப்புளோவர், சாம்பல் புளோவர், கேஸ்பியன் டேர்ன் போன்ற பறவைகள் இருந்தது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரம் பறந்து வந்த பறவைகள் இருந்ததும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று கடலோர பகுதியில் நடந்தது. குளம் சார்ந்த பகுதிகளில் இன்னொரு நாள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். குமரி மாவட்டத்திற்கு தற்போது வழக்கத்தை விட அதிகமான பறவைகள் வந்துள்ளது. இனப்பெருக்கங்களும் அதிகரித்துள்ளது. வேட்டையாடுதல் போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளது என்றார்.




Tags:    

Similar News