தமிழ்நாடு
சிற்பி பாலசுப்பிரமணியம்.

தமிழ் கவிஞர்களுக்கு பத்மஸ்ரீ விருதை சமர்ப்பிக்கிறேன்- கோவை சிற்பி பாலசுப்பிரமணியம் பேட்டி

Update: 2022-01-26 07:46 GMT
இளம் கவிஞர்கள், கலைஞர்கள் ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று கோவை சிற்பி பாலசுப்பிரமணியம் கூறினார்.
கோவை:

தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் கோவையைச் சேர்ந்த கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியமும் ஒருவர்.

இவர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்துபொள்ளாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். பத்மஸ்ரீ விருது பெறும் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

இவ்வளவு நீண்ட காலமாக இலக்கியத் துறையில் பங்காற்றியதற்காக இதனை ஒரு அங்கீகாரமாக கருதுகிறேன். தமிழ் இலக்கிய உலகில் இருந்து மிக சில எழுத்தாளர்களே இத்தகைய விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அரசின் இந்த விருதுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் கவிஞர்கள் சார்பில், நான் இந்த விருதை பெற உள்ளேன். இந்த விருதை தமிழ் கவிஞர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தற்போது முகந்து தீரா கடல், செங்காந்தள் ஆகிய கவிதைத் தொகுப்புகள் உட்பட 3 புத்தகங்களை எழுதி வருகிறேன்.

இளம் கவிஞர்கள், கலைஞர்கள் ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். பொள்ளாச்சி என்பது ஒரு கிராமப்புறம் தான். ஒரு கிராமத்திலிருந்து ஒரு எழுத்தாளருக்கு விருது கிடைக்கும்போது மற்ற இளைஞர்கள், கவிஞர்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமையும். அவர்களின் உழைப்புக்கேற்ற பரிசு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவர்.

மொழி பெயர்ப்புக்காகவும் (2001 அக்கினிசாட்சி), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003 ஒரு கிராமத்து நதி) இரண்டு முறை சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் பாவேந்தர் விருது, சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசு விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவர் கவிதைகள், கட்டுரைகள் என 130-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் தமிழ் துறையின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.

சாகித்திய அகாடமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளராக 2007 முதல் 2012 வரை இருந்துள்ளளார். இப்போது அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் இயக்குநராக உள்ளார்.


Tags:    

Similar News