தமிழ்நாடு
விபத்துக்குள்ளான வேன்- லோடு ஆட்டோ.

குலசேகரன்பட்டினம் அருகே விபத்து- தொழிலாளி பலி

Published On 2021-12-16 04:01 GMT   |   Update On 2021-12-16 04:01 GMT
குலசேகரன்பட்டினம் அருகே லோடு ஆட்டோ மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உடன்குடி:

குலசேகரன்பட்டினம் அண்ணாசிலை பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது61). தொழிலாளி. இவரது மகன் முத்துகிருஷ்ணன் (32). இவர் தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகிறார்.

நேற்று இரவு முத்து கிருஷ்ணன், தனது தந்தை தர்மராஜ், அதே பகுதியை சேர்ந்த ராஜா (30) ஆகியோருடன் தண்ணீர் கேன் சப்ளை செய்வதற்காக லோடு ஆட்டோவில் சென்றனர்.

ஆட்டோ குலசை கருங்காளியம்மன் கோவிலிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையை கடந்து உடன்குடி சந்திப்பு சாலைக்கு செல்ல முயன்றது.

அப்போது ஈரோடு வில்லரசன் பட்டி முத்துமாணிக்கம் நகரை சேர்ந்த சுமார் 20 பேர் சுற்றுலா வேனில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு திருச்செந்தூர் வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்ற தண்ணீர் கேன் ஏற்றி வந்த லோடு ஆட்டோ மீது வேன் பயங்கரமாக மோதியது.

இதில் முத்துகிருஷ்ணன், தர்மராஜ், ராஜா, ஈரோட்டைச் சேர்ந்த ஜெகதீஷ், சந்தோஷ், பிரிதா, நவீன், நடராஜ் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்து திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தர்மராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். காயம் அடைந்த மேலும் 11 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News