செய்திகள்
கைது

சென்னையில் 11 மாதங்களில் 357 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2021-11-27 07:24 GMT   |   Update On 2021-11-27 07:24 GMT
சென்னையில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பவர்கள் மீதும் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றங்களில் ஈடுபட்டதாக 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 88 பேர் கைதாகி உள்ளனர். சைபர் கிரைம் சார்ந்த குற்றங்கள் தொடர்பாக 18 பேரும், கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தி விற்பனை செய்த 20 பேரும் பிடிபட்டனர்.

உணவு பொருட்களை கடத்தி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி விற்ற 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் 2 பேர் கைதாகி உள்ளனர்.

இதுபோன்று குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 357 குற்றவாளிகள் கடந்த 11 மாதத்தில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 நாளில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சென்னையில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பவர்கள் மீதும் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News