செய்திகள்
பக்தர்கள் காத்திருப்பு கூடத்தில் அமைக்கப்பட்டு உள்ள இருக்கைகளை படத்தில் காணலாம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் திறப்பு

Published On 2021-10-25 02:10 GMT   |   Update On 2021-10-25 02:10 GMT
திருப்பதியை போன்று பக்தர்கள் இருக்கையில் அமர்ந்து சென்று சாமி தரிசனம் செய்ய வசதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் நேற்று திறக்கப்பட்டது.
திருச்செந்தூர் :

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்று திருச்செந்தூர் கோவிலிலும் தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களின் வசதிக்காக பக்தர்கள் காத்திருப்பு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ராஜகோபுரம் அருகில் இருந்த காவடி மண்டபம் ‘பக்தர்கள் காத்திருக்கும் கூடம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அங்கு 408 பேர் அமரும் வகையில் இருக்கைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் கூடம் நேற்று திறக்கப்பட்டது.

இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்பு மணி இனிப்பு வழங்கினார். தொடர்ந்து தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இருக்கைகளில் அமர்ந்து விட்டுதரிசனம் செய்து சென்றனர்.

இதற்கிடையே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் தங்கத்தேர் ஓடாமல் இருந்தது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து நாட்களிலும் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், 6 மாதத்திற்கு பிறகு நேற்று மாலையில் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு தொடங்கியது. சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தங்கத்தேர் கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Tags:    

Similar News