செய்திகள்
வீரப்பன் நினைவிடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி, மகள் பிரபாவதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

17-வது நினைவு தினம்: வீரப்பன் சமாதியில் மனைவி, மகள் அஞ்சலி

Published On 2021-10-18 07:09 GMT   |   Update On 2021-10-18 07:09 GMT
கொரோனா ஊரடங்கு காரணமாக கூட்டம் கூடுவதற்கு அனுமதி மறுத்து வீரப்பனின் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூர்:

தமிழக-கர்நாடக போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வீரப்பனின் உடல் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் ஆண்டுதோறும் வீரப்பனின் குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இன்று வீரப்பனின் 17-ம் ஆண்டு நினைவு தினம் ஆகும். இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக கூட்டம் கூடுவதற்கு அனுமதி மறுத்து அஞ்சலி நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தடையை மீறி வருபவர்களை கண்காணிக்க மேட்டூரில் இருந்து மூலக்காடு வரும் பாதையில் 7 இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வந்தவர்களின் செல்போன் எண், முகவரிகள் சேகரிக்கப்பட்டன. எனினும் தனித்தனியாக வந்து வீரப்பனின் உறவினர்களும், ஆதரவாளர்களும் அஞ்சலி செலுத்தினர். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, மகள் பிரபாவதி ஆகியோர் வீரப்பன் சமாதியில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News