செய்திகள்
கைது

சென்னையில் விடிய, விடிய நடந்த வேட்டையில் 100 ரவுடிகள் சிக்கினார்கள்

Published On 2021-09-24 06:51 GMT   |   Update On 2021-09-24 06:51 GMT
எம்.கே.பி நகர், சாஸ்திரி நகர் மார்க்கெட் அருகில் உள்ள ஒரு குற்றவாளியின் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு பதுக்கி வைத்திருந்த கத்தி கைப்பற்றப்பட்டது. அந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகள் வேட்டை நடந்து வருகிறது.

இதேபோல் சென்னையில் போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி பழைய குற்றவாளிகள், தலைமறைவு குற்றவாளிகள், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்ய போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு களத்தில் இறங்கினர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் இந்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு சோதனை நடைபெற்றது.

புளியந்தோப்பு பகுதியில் துணை கமி‌ஷனர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். எம்.கே.பி நகர், சாஸ்திரி நகர் மார்க்கெட் அருகில் உள்ள ஒரு குற்றவாளியின் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு பதுக்கி வைத்திருந்த கத்தி கைப்பற்றப்பட்டது. அந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரவுடிகளின் வீடு, வீடாக சென்று சோதனை செய்தனர்.

மொத்தம் 70 பேரின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு, 25 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசாரின் இந்த அதிரடி சோதனையில் எம்.கே.பி. நகரில் 3பேர், வியாசர்பாடியில் 3 பேர், புளியந்தோப்பில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி மற்றும் வடசென்னை பகுதியில் உள்ள லாட்ஜூகளிலும் சோதனை நடந்தது. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக சென்னையில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சிக்கினர். அவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News