செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நிலவரம்

Published On 2021-09-17 03:45 GMT   |   Update On 2021-09-17 03:45 GMT
இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
மேட்டூர்:

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.

இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 அணைகளில் இருந்தும் தற்போது 22 ஆயிரத்து 900 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லில் நேற்று காலை 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று 19 ஆயிரம் கன அடியாக வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 11 ஆயிரத்து 521 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 17 ஆயிரத்து 899 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 74.18 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் உயர்ந்து 74.27 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News