செய்திகள்
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், அசாம் வாலிபருக்கு உதவி பொருட்கள் அடங்கிய பையை வழங்கியபோது எடுத்த படம்.

அசாம் வாலிபருக்கு மறுவாழ்வு கொடுத்த சென்னை போலீசார்

Published On 2021-06-18 03:10 GMT   |   Update On 2021-06-18 03:10 GMT
மனநலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய அசாம் வாலிபருக்கு சென்னை போலீசார் மறுவாழ்வு கொடுத்துள்ளனர். அந்த வாலிபரை அவரது சொந்த அண்ணனிடம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஒப்படைத்தார்.
சென்னை:

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ‘காவல்கரங்கள்’ என்ற அமைப்பு செயல்படுகிறது. போலீஸ் கமிஷனரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் இந்த அமைப்பை 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்த அமைப்பின் மூலம் சாலைகளில் அனாதையாக சுற்றித்திரிந்த மன நோயாளிகள், பிள்ளைகளால் விரட்டி விடப்பட்ட முதியவர்கள் மற்றும் அனாதைகளாக சுற்றித்திரிந்த பலர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்துக்கு கீழ் மனநலம் பாதிக்கப்பட்டு, உடல் முழுக்க காயங்களோடு ஒரு வாலிபர் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அவரை ‘காவல்கரங்கள்’ அமைப்பு மூலம் மீட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. நடக்க முடியாமல் இருந்த அவர், தற்போது நலம் பெற்றார். மனநோயாளியாக இருந்த அவர் பூரண குணம் அடைந்தார்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது, கல்லும் கரையும் சோகக்கதையை சொன்னார். அவரது பெயர் ஜாபர் அலி (வயது 23) என்றும், அசாம் மாநிலம், பக்சா மாவட்டம், பங்காலி பர்கா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவரது பெற்றோர் மற்றும் அண்ணன் போன்ற உறவினர்கள் உள்ளனர். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர், ஸ்டீல் கம்பெனி ஒன்றில் நாகர்கோவிலில் வேலை செய்துள்ளார்.

விபத்து ஒன்றில் சிக்கி காலில் காயம் ஏற்படவே அனாதையாக விரட்டி விடப்பட்டதாக தெரிகிறது. காலில் காயத்தோடு ரெயில் ஏறி சென்னை வந்த அவர், மனநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு, போலீஸ் உதவியால் மீண்டார்.

அவரது அண்ணனை போலீசார் சென்னைக்கு வரவழைத்தனர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மறுவாழ்வு பெற்ற வாலிபர் ஜாபர்அலியை பத்திரமாக அவரது அண்ணனிடம் நேற்று ஒப்படைத்தார்.

பின்னர் அவருக்கு வேண்டிய உதவிகளும் செய்து கொடுத்தார். போலீஸ் கமிஷனருக்கும், தனக்கு மறு வாழ்வு கொடுத்த ‘காவல்கரங்கள்’ அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் ஜாபர் அலி நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News