செய்திகள்
பண்டாரம் பட்டி பகுதியில் வீடுகளின் முன்பு கோலம் வரையப்பட்டுள்ள காட்சி

தூத்துக்குடியில் இன்று வீடுகளின் முன்பு கோலம் வரைந்தும், கருப்பு கொடி கட்டியும் கிராம மக்கள் போராட்டம்

Published On 2021-04-29 09:37 GMT   |   Update On 2021-04-29 09:37 GMT
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பண்டாரம் பட்டி பகுதியில் வீடுகளின் முன்பு கோலம் வரைந்தும் கருப்பு கொடி கட்டியும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஜூலை வரை அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

தூத்துக்குடி, பண்டாரம்பட்டி புதுத்தெரு கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு ஊரடங்கு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என போலீசார் கேட்டு கொண்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்க கூடாது என வலியுறுத்தி பண்டாரம்பட்டி, எட்டயபுரம், காந்திநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர்.

தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கூறும் போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை கண்டித்து தூத்துக்குடியில் இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி பொதுமக்கள் வெள்ளை சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு எதிர்ப்புகளை தெரிவிக்கும் விதமாக கருப்பு கோலங்கள் வரைவது, வீடுகளின் முன்பு கருப்பு கொடி கட்டுவது என முடிவு செய்தனர்.

அதன்படி இன்று தூத்துக்குடி பண்டாரம்பட்டி பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு ‘ஸ்டெர்லைட்டை தடை செய்’ என கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இதே போல் மீளவிட்டான் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு கருப்பு கொடி கட்டப்பட்டி ருந்தது. இதே போல் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் இன்று ஸ்டெர்லைட் டுக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் திறக்க அனுமதி, கிராம மக்கள் போராட்டம் காரணமாக தூத்துக்குடியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இன்று பிற்பகல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க உள்ளனர்.

இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News