செய்திகள்
மதுரை மத்திய சிறை

மதுரை ஜெயிலில் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு

Published On 2021-04-28 04:31 GMT   |   Update On 2021-04-28 04:31 GMT
தமிழகத்தில் கொரோனா பரவலின் தொடக்கத்தில் மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகள் உறவினர்களை சந்திக்க 9 மாதங்கள் அனுமதி மறுக்கப்பட்டது.

மதுரை:

கொரோனா 2-வது அலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

மதுரை மத்திய சிறையில் 1200 கைதிகள் உள்ளனர். அவர்களில் விசாரணைக் கைதிகள், தண்டனைச் சிறைவாசிகள், தடுப்புக் காவல் சிறைவாசிகள் என 3 வகைகள் உண்டு. இதில் விசாரணை கைதிகளை திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் உறவினர்கள் சந்திக்க முடியும். தண்டனை மற்றும் தடுப்புக் காவல் சிறை வாசிகளை செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் சந்திக்கலாம்.

தண்டனைக் கைதிகளை உறவினர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை 3 பேர் சந்திக்கலாம். காலையில் மனு அளித்தால் மாலைக்குள் சந்திக்க முடியும். மத்திய ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளை உறவினர்கள் சந்திப்பது முக்கியமான ஒன்று. இதன் மூலம் கைதிகளின் மன அழுத்தம் குறைந்து மனநோய் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் தொடக்கத்தில் மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகள் உறவினர்களை சந்திக்க 9 மாதங்கள் அனுமதி மறுக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்தபிறகு தான் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது

இந்த நிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக மத்திய சிறையில் உள்ள கைதிகளை வெளி நபர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதேநேரத்தில் சிறைக் கைதிகள் தொலைபேசி மற்றும் வீடியோ கால் மூலம் உறவினர்களுடன் பேச வழிவகை செய்து தரப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News