செய்திகள்
விண்ணப்பம்

தபால் வாக்கு அளிக்கும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் விவரங்களை கட்சி முகவர்களுக்கு தெரிவிக்க தடை

Published On 2021-03-09 08:12 GMT   |   Update On 2021-03-09 08:12 GMT
தபால் மூலம் வாக்கு அளிக்க விருப்பம் உள்ளதா? இல்லையா என்பதை பூர்த்தி செய்து கொடுப்பார்கள். அப்படி பெறப்பட்ட விண்ணப்பங்களை இறுதியாக பரிசீலனை செய்து தகுதியான வாக்காளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கோவை:

கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்கள் மற்றும் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு ஓட்டுப்பதிவு எந்திரத்தை கையாள்வது எப்படி, தபால் வாக்கு குறித்த சந்தேகங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விளக்கி கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தபால் வாக்கு குறித்து வாக்குசாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதன் பேசியதாவது:-

பொள்ளாச்சி தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 6,438 இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் விருப்பம் உள்ளவர்கள் தபால் வாக்கு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அவர்களுக்கு 12 டி விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இந்த விண்ணப்பத்தில் தபால் மூலம் வாக்கு அளிக்க விருப்பம் உள்ளதா? இல்லையா என்பதை பூர்த்தி செய்து கொடுப்பார்கள். அப்படி பெறப்பட்ட விண்ணப்பங்களை இறுதியாக பரிசீலனை செய்து தகுதியான வாக்காளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த தபால் வாக்குகளில் ஏதாவது சந்தேகம் இருந்தால் வாக்குச்சாவடி அலுவலர்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு யாரிடமும் வழங்கக் கூடாது. இது தொடர்பாக திடீரென ஆய்வும் நடத்தப்படும். எல்லோருக்கும் விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும்.

விண்ணப்பங்களை கொடுத்தற்கு ஆதாரமாக புகைப்படம் மற்றும் கையெழுத்து வாங்கி கொள்ள வேண்டும்.

தபால் மூலம் வாக்களிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சி முகவர்களுக்கு தெரிவிக்க கூடாது. வாக்குச்சாவடிகளில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

வாக்காளர்கள் நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்குச்சாவடி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், உடல் நலத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

தபால் வாக்கு அளிக்கும் மாற்றுத்திறனாளிகள் பூர்த்தி செய்யும் விண்ணப்ப படிவத்துடன் அடையாள அட்டை நகலும், முதியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையின் நகலை இணைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News