செய்திகள்
பழனி பஞ்சாமிர்தம்

பழனி கோவில் நிர்வாகத்துடன் இணைந்து தபால் மூலம் பஞ்சாமிர்தம் வழங்கும் சேவை தொடங்கியது

Published On 2021-02-11 02:43 GMT   |   Update On 2021-02-11 02:43 GMT
பழனி முருகன் கோவில் நிர்வாகத்துடன் இணைந்து தபால் மூலம் பஞ்சாமிர்தம் வழங்கும் சேவை தொடங்கியது. வருகிற திங்கட்கிழமை முதல் இந்த சேவை தொடங்க உள்ளது.
பழனி

பழனி என்றவுடன், பஞ்சாமிர்தம் தான் நம் நினைவுக்கு வரும். இந்த பஞ்சாமிர்தம், பழனி முருகன் கோவில் பிரசாதமாக உள்ளது. பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள், பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர்.

இந்தநிலையில் தபால் துறையுடன் இணைந்து பக்தர்களின் வீடுகளுக்கே சென்று பஞ்சாமிர்தம் வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தபால் மூலம் பஞ்சாமிர்தம் வழங்கும் சேவை தொடக்க விழா, பழனி தண்டாயுதபாணி நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவில் தென்மண்டல தபால்துறை இயக்குனர் மோகன்தாஸ், பழனி கோவில் செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி ஆகியோர் கலந்து கொண்டு சேவையை தொடங்கி வைத்தனர். முன்னதாக அவர்கள், இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறுகையில், கோவில் பிரசாதமான அரை கிலோ பஞ்சாமிர்தம், ராஜஅலங்கார முருகன் புகைப்படம், 10 கிராம் விபூதி அடங்கிய தொகுப்பு பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படும். இந்த பிரசாத தொகுப்பை பெற தங்கள் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் முகவரி படிவத்தை பூர்த்தி செய்து ரூ.250-ஐ செலுத்த வேண்டும்.

மேலும் பழனி முருகன் கோவில் இணையதளத்திலும் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். வருகிற திங்கட்கிழமை முதல் இந்த சேவை தொடங்க உள்ளது. எனவே வெளியூர், வெளிமாநில பக்தர்கள் இந்த சேவையின் மூலம் பஞ்சாமிர்தம் பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.
Tags:    

Similar News