செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் உருவப்படத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்.

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு மலர் அஞ்சலி: போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு

Published On 2021-01-09 03:59 GMT   |   Update On 2021-01-09 03:59 GMT
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மறைந்து ஓராண்டாகிறது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
களியக்காவிளை:

குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சந்தை ரோட்டில் அமைந்துள்ள சோதனை சாவடியில் கடந்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (வயது 26), நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபிக் (28) ஆகிய 2 பயங்கரவாதிகள் திடீரென வில்சனை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்.

இந்த நிலையில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட வில்சன் நினைவு தினம் நேற்று அனு‌‌ஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி மார்த்தாண்டம் பருத்திவிளை மெயின்ரோட்டில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பங்கேற்று மறைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் தக்கலை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குளச்சல் போலீஸ் நிலையத்தில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் மேரி அனிதா, சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் உள்பட போலீசார் கலந்து கொண்டு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் உருவப்படத்துக்கு மலர் தூவி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
Tags:    

Similar News