செய்திகள்
ஆடுகள் உயிரிழப்பு

சங்கராபுரம் பகுதியில் கனமழை- ஏரியில் மூழ்கி 600 ஆடுகள் உயிரிழப்பு

Published On 2021-01-07 09:49 GMT   |   Update On 2021-01-07 09:49 GMT
தொடர் மழையின் காரணமாக சங்கராபுரம் பகுதியில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் பண்ணையில் இருந்த 600 ஆடுகள் மூழ்கி உயிரிழந்தன.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தை சேர்ந்த கருத்தபிள்ளை, பழனி, அஞ்சலை ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த பகுதியில் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்கள். இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரை ஓடை அருகே பட்டி அமைத்து அதில் 600-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை அடைத்து வைத்திருந்தனர்.

தற்போது சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சிலநாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதியில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சங்கராபுரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தொடர் மழையின் காரணமாக ஏரி ஏற்கனவே முழு கொள்ளளவையும் எட்டியிருந்தது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால் ஏரியின் ஓடை பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந்த வெள்ளம் ஓடை அருகே உள்ள ஆட்டுபட்டியில் புகுந்தது. இதனால் அங்கு அடைக்கப்பட்டு இருந்த செம்மறி ஆடுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஆடுகள் ஒட்டுமொத்தமாக கத்தியது. நள்ளிரவு சமயம் என்பதால் ஆடுகளின் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. எனவே 600 ஆடுகளும் ஏரி தண்ணீரில் மூழ்கி இறந்தது.

இன்று காலை வழக்கம் போல் ஆட்டுபண்ணைக்கு வந்த கருத்தபிள்ளை, பழனி, அஞ்சலை ஆகியோர் பண்ணையில் இருந்த ஆடுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பலியான ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் ஆகும். வெள்ளத்தில் ஆடுகள் அடித்து செல்லப்பட்டதால் ஆட்டுபண்ணை உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News