செய்திகள்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் நடமாடும் எலிகளில் ஒன்றை படத்தில் காணலாம்.

சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் எலிகள்

Published On 2020-10-21 05:37 GMT   |   Update On 2020-10-21 05:37 GMT
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் எலிகள் நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்:

சேலம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களில் பலர் உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் எலிகள் அங்கும், இங்குமாக ஓடுவது போன்றும், திரவ ஆக்சிஜன் பைப் வழியாக செல்வது போன்றும் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதியடைகின்றனர். இதேபோன்று ஆஸ்பத்திரியில் பல்வேறு இடங்களில் எலிகள் நடமாட்டம் அதிகளவு இருப்பதாக நோயாளிகள் புகார் கூறுகின்றனர். இதையடுத்து ஆஸ்பத்திரியில் எலிகளை பிடிப்பதற்காக எலிப்பொறிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் கூறியதாவது:-

ஆஸ்பத்திரியில் நோயாளிகளை கவனித்து வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு கீழே போடும் உணவு பொருட்களை சாப்பிடுவதற்காகவும், மழைக்காலம் என்பதாலும் எலிகள் அதிகளவு வருகின்றது. இதை பிடிக்க ஆஸ்பத்திரியில் 40 இடங்களில் எலிப்பொறிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர ஒரே நேரத்தில் 15 எலிகள் வரை பிடிபடும் வகையில் 2 மெகா எலிப்பொறிகள் (கூண்டுகள்) வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை ஒப்பந்த பணியாளர்கள் செய்து வருகின்றனர். எலிகளால் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கருவிகளுக்கு பிரச்சினை வந்துவிட கூடாது என்பதற்காக துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

குறிப்பாக ஆக்சிஜன் வரும் குழாய்கள் அனைத்தும் இரும்பு கம்பியால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அருகே செல்லும் வயர்களை சேதப்படுத்த எலிகள் வாய்ப்புள்ளதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எலிகளால் இதுவரை எந்த நோயாளிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்படும் உணவு கடைகளில் மீதமாகும் உணவு பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News