செய்திகள்
வைகை அணை

வைகை அணை நீர்மட்டம் 33 அடியாக சரிவு- மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

Published On 2020-07-12 07:39 GMT   |   Update On 2020-07-12 07:39 GMT
வைகை அணை நீர்மட்டம் 33 அடியாக சரிந்துள்ளதால் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் தொடங்கி ஆகஸ்டு மாத இறுதிவரையில் தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி ஒருமாதத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், தேனிமாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதன்காரணமாக வைகை அணை உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து இல்லாமல் உள்ளது.

எனவே வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்றுகாலை 6 மணிநிலவரப்படி 32.97 அடியாக உள்ளது.

வைகை அணையில் இருந்து மதுரை மாநகரம், தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு நீர்வரத்தாக உள்ளது.

இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை பெய்யத்தவறும் பட்சத்தில் தற்போது வைகை அணையில் இருக்கும் தண்ணீரின் மூலம் 2 மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக மதுரை மாவட்டம் உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டப்பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
Tags:    

Similar News