செய்திகள்
தீக்குளிப்பு

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு- பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனத்துறை ஊழியர் தீக்குளிப்பு

Published On 2020-07-09 05:59 GMT   |   Update On 2020-07-09 05:59 GMT
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனத்துறை ஊழியர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 54). இவர், திண்டுக்கல் மாவட்ட வன அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளநிலை உதவியாளராக வேலை செய்தார். பின்னர் கரூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லில் பணிபுரிந்தபோது, ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்குவதில் முறைகேடு செய்து, பணம் கையாடல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமாரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து குமார், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே அரசு ஊழியர்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிழைப்பு ஊதியமாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால் அந்த தொகை குமாருக்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அவர், வனத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வந்தார். அதன்படி நேற்றும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு வந்து முறையிட்டார். அப்போது விரைவில் தொகை கிடைக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் திருப்தி அடையாத குமார், விரக்தியுடன் வெளியே வந்தார்.

பின்னர் வனத்துறை அலுவலகம் அருகே அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் முழுவதும் தீப்பிடித்ததால் அவர் அலறி துடித்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் வனத்துறை அலுவலகம் அருகே ஊழியர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News