செய்திகள்
மோட்டார் சைக்கிளின் முன்பகுதி சேதமாகி உள்ள காட்சி.

ஓசூர் அருகே விபத்து- 2 வாலிபர்கள் பலி

Published On 2020-02-26 05:03 GMT   |   Update On 2020-02-26 05:03 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலை லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இப்பகுதியில் செல்லும் லாரி டிரைவர்கள் சற்று இளைப்பாறுவதற்கும், காலைக் கடனை முடிப்பதற்கும் அடிக்கடி, சாலையோரங்களில் லாரிகளை நிறுத்துவது வழக்கம். அவர்கள் அருகில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று உணவு சாப்பிடுவதையும் வழக்கமாக கொண்டு உள்ளனர்.

சூளகிரி அருகே உள்ள சின்னாறு பகுதியில் லாரிகளை நிறுத்துவார்கள். அதன்படி, இன்று அதிகாலை 7 மணி அளவில் சின்னாறு பகுதியில் சரக்கு லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் சின்னாறு பகுதியில் வரும்போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது வேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மோதியது.

கண் இமைக்கு நேரத்தில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களை திகைக்க வைத்தது. உடனே அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கி கிடந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், விபத்தில் இறந்த வாலிபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தில் இறந்த வாலிபர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்று விசாரணை நடத்தினர்.

அப்போது இறந்தவரின் சட்டைபையில் இருந்த ஆவணங்களை வைத்து விசாரித்தபோது அதில் ஒருவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பாண்டு ரெங்கன் தெருவைச் சேர்ந்த பொன்னன் மகன் திருமூர்த்தி (வயது27) என்பது தெரியவந்தது. அவருடன் வந்த வாலிபரின் பெயர் விவரம் போலீசாருக்கு தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News