செய்திகள்
விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகம் எதிரில் த.மு.மு.க.வினர் டார்ச்லைட் அடித்து போராட்டம் நடத்தினர்

விழுப்புரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் முஸ்லிம்கள் போராட்டம்

Published On 2020-02-17 08:55 GMT   |   Update On 2020-02-17 08:55 GMT
சென்னையில் போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து விழுப்புரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:

சென்னை பழைய வண்ணார்பேட்டையில் கடந்த 14-ந் தேதி முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சாலை மறியலில் ஈடுபடமுயன்ற போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கம் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர்.

சென்னையில் முஸ்லிம்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் நடத்திய தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

அதுபோல் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் த.மு.மு.க. சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினர். மாலை 6 மணி அளவில் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் அங்கேயே தொழுகை நடத்தினர்.

அதன்பின்பு இரவு 7 மணி அளவில் அவர்கள் டார்ச்லைட் வெளிச்சத்தில் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் இரவு 8 மணிவரை நடைபெற்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு அவர்கள் கலைந்து சென்றனர்.

கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நகர தலைவர் அப்துல் ரவூப் தலைமையில் நேற்று மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொகுதி செயலாளர் முன்வர் உசேன் கண்டன கோ‌ஷம் எழுப்பினார்.

மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹிமான், ஏ.எல்.எல்.சி. மாநில செயலாளர் அப்துல்காதர் ஹசனி, பிப்ஐ பகுதி தலைவர் அன்வர், விடுதலை சிறுத்தைகள் கட்சிநகர செயலாளர் அம்பேத், எம்.ஜெ.கே. மாவட்ட துணை செயலாளர் சலீம், ஆகியோர் பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.டி.பி.ஐ. தொகுதி துணை தலைவர் இர்பான் நன்றி கூறினார்.

வடலூர் பஸ்நிலையம் அருகில் நேற்று மாலை முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடலூர் பள்ளிவாசல் நிர்வாகிகள், பக்ருதீன், முத்தலிப், முகமது அலி, செயலாளர் சையது அபு தாகிர், பொருளாளர் பஷீர் அகமது மற்றும் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். சுமார் 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Tags:    

Similar News