செய்திகள்
போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு

Published On 2020-02-17 05:56 GMT   |   Update On 2020-02-17 08:44 GMT
பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போலீசாரின் தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் முஸ்லிம்களின் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.
ராயபுரம்:

பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா லாலகுண்டா பகுதியில் கடந்த 14-ந் தேதி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினார்கள்.

சாலைமறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது நடைபெற்ற கல்வீச்சில் போலீசார் சிலர் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.

போலீசாரின் தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும், இது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அதே பகுதியில் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடந்தது.

அவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் தலைவர் சுப.உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

முஸ்லிம்களின் போராட்டம் நேற்றும் விடிய விடிய நீடித்தது. பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடந்த இடத்திலேயே அமர்ந்து இருந்தனர்.

இன்று 4-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து கோ‌ஷம் எழுப்பி வருகிறார்கள்.

காலை முதல் போராட்டத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையே போராட்டம் நடக்கும் இடத்தில் போடப்பட்டு இருந்த மேடையில் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் பகுதியை சேர்ந்த ‌ஷயின்ஷா-சுமையா ஆகியோரின் திருமணம் நடந்தது

அவர்களது திருமணத்தை இன்று இரு வீட்டாரின் முன்னிலையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக திருமணத்தை வேறு தேதியில் மாற்றி வைக்கலாமா? என்று எண்ணி இருந்ததாக தெரிகிறது.

பின்னர் போராட்ட களத்திலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இன்று ‌ஷயின்ஷா-சுமையா திருமணம் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே சிறப்பாக நடைபெற்றது. புதுமண தம்பதிகளுக்கு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் மணமக்கள் கூறும்போது, “குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்” என்றார்.
Tags:    

Similar News