செய்திகள்
டெங்கு காய்ச்சல்

பெரியகுளம் பகுதியில் சிறுவன் உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

Published On 2020-02-15 04:59 GMT   |   Update On 2020-02-15 04:59 GMT
பெரியகுளத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
பெரியகுளம்:

தமிழகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சில பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

டெங்கு உள்ளிட்ட பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கிராமங்கள் தோறும் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை மூலமாக தடுப்பு நடவடிக்கைகள், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் புரம், ஸ்டேட் பாங்க் காலனி பகுதிகளில் சிலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்றபோதும் காய்ச்சல் தொடர்ந்ததால் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதில் ஈஸ்வரி, பானு ஆகியோரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

இதேபோல் சில்வார் பட்டியை சேர்ந்த லஸ்வின் பாண்டியன் என்ற 3½ வயது சிறுவனும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

சம்பவ இடத்துக்கு மருத்துவத்துறையினர் விரைந்து சென்று முகாமிட்டுள்ளனர். சுகாதார பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News