செய்திகள்
அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம்

அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்துடன் 2 சுரங்க பாதைகள் இணைப்பு

Published On 2020-02-11 07:23 GMT   |   Update On 2020-02-11 07:23 GMT
அண்ணா சாலையில் அடுத்த மாதம் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் 2 சுரங்கப்பாதைகள் இணைக்கப்பட உள்ளது.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரம் வழித்தட பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. தினமும் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.

மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதில் சென்று வர வசதியாக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோ நிறுவனம் செய்து வருகிறது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள 2 சுரங்கப் பாதைகள் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் அடுத்த மாதம் இணைக்கப்பட உள்ளது.

அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகில் உள்ள 3 வழியுடன் கூடிய வாலாஜா சாலை சுரங்க நடைபாதை மற்றும் அண்ணா சாலை பன்நோக்கு மருத்துவமனை அருகில் உள்ள சுரங்கப்பாதை ஆகியவை அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் விரைவில் இணைக்கப்படுகிறது.

நெடுஞ்சாலை துறை இந்த 2 சுரங்கப்பாதைகளை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. தற்போது இணைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இதன் மூலம் அண்ணா சாலை சுரங்கப்பாதையில் இருந்து அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தை பயணிகள் எளிதில் சென்று அடையலாம்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதில் சென்றுவர வசதியாக அண்ணா சாலையில் உள்ள 2 முக்கிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதைகள் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் அடுத்த மாதம் இணைக்கப்படும்.

இதன் மூலம் அண்ணா சாலையில் இருந்து பயணிகள் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தை எளிதில் சென்று அடையலாம். இதன்மூலம் பயணிகள், பொது மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News