செய்திகள்
சிபிசிஐடி

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - சித்தாண்டியின் கூட்டாளி கைது

Published On 2020-02-05 03:50 GMT   |   Update On 2020-02-05 05:18 GMT
குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த காவலர் பூபதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சித்தாண்டியின் கூட்டாளி என தெரிய வந்துள்ளது.
சென்னை:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய ஊர்களில் உள்ள மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 39 பேர் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் வந்தது பெரும் சர்ச்சையானது. 

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணைக்கு பின்பு அடுக்கடுக்காக பெரும் முறைகேடுகள் அம்பலத்துக்கு வரத்தொடங்கின. இதில் பல கோடி ரூபாய் கைமாறியது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக அரசு பணியில் இருப்பவர்களும், இடைத்தரகர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். 

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்தது தெரிய வந்தது. மோசடி செய்து தேர்ச்சி பெற்ற அரசு அதிகாரிகள் பலரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாகியிருந்த முக்கிய நபரான ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த நிலையில், சித்தாண்டியின் கூட்டாளி காவலர் பூபதி என்பவர் சிபிஐசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கையை சேர்ந்த  காவலர் பூபதி ஆயுதப்படை காவலர் சித்தாண்டியுடன் சேர்ந்து முறைகேடு செய்தது தெரியவந்துள்ளது. சித்தாண்டி, பூபதியை ஒன்றாக வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News