செய்திகள்
செல்லப்பாண்டி - ஸ்ரீதர் - பழனியாண்டி - உத்தரகுமார்

ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி 4 பேர் பலி

Published On 2020-01-18 03:01 GMT   |   Update On 2020-01-18 03:01 GMT
அலங்காநல்லூர், ஆவாரங்காடு, வேம்பனேரியில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மாடுகள் முட்டியதில் 4 பேர் பலியானார்கள்.
அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழா நேற்று நடந்து. இதில் பங்கேற்க காளைகளுக்கு வரிசைப்படி டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கங்கோட்டையை சேர்ந்த பந்தல் காண்டிராக்டர் வீரபத்திரன் மகன் ஸ்ரீதர் (வயது27). என்ஜினீயரான இவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தன்னுடைய நண்பர் மருதுபாண்டியின் காளையுடன் சென்றிருந்தார்.

அப்போது திடீரென ஒரு காளை மிரண்டதில் அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஸ்ரீதருக்கு பின்னால் நின்றிருந்த காளை ஒன்று அவரை முட்டியது.

இதில் படுகாயம் அடைந்து அவர் அலறியபடி கீழே விழுந்தார். உடனே அங்கு நின்றிருந்தவர்கள் அவரை மீட்டு அலங்காநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்ரீதர் என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர் என்றாலும், தற்போது ராமநாதபுரம் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய நண்பர் மருதுபாண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு காளைக்கு பயிற்சி அளித்தபோது, காலில் மாடு முட்டியது. இதையடுத்து அவருக்கு துணையாக காளையுடன் ஸ்ரீதர் சென்றுள்ளார். ஆனால், அவர் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மதுரை மாவட்டம் செக்கானூரணி ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (50). கட்டிட தொழிலாளி. இவர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்தார். வாடிவாசலில் இருந்து வெளியேறி காளைகள் ஓடிவரும் பகுதியில் ஓரமாக நின்று செல்லப்பாண்டி ஜல்லிக்கட்டு விழாவை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ஓடிவந்த காளை ஒன்று திடீரென செல்லப்பாண்டியை நோக்கி சீறி வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டின்போது புதுக்கோட்டை மாவட்டம், ராஜகிரி அருகே உள்ள சுக்காம்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி(வயது 55) என்பவருக்கு சொந்தமான காளையும் அவிழ்த்துவிடப்பட்டது.

வாடிவாசலில் இருந்து வெளியேறி வீரர்களிடம் சிக்காமல், திடலை கடந்து ஓடி வரும் காளையின் மீது கயிற்றை போட்டு பிடிப்பதற்காக, பழனியாண்டி திடலை விட்டு காளை வெளியேறும் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடி வந்த மற்றொரு காளை, அவரை முட்டித்தள்ளியது. இதில் அந்த காளையின் கொம்பு, பழனியாண்டியின் கழுத்தில் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வேம்பனேரி கிராமத்தில் அய்யனாரப்பன் கோவில் முன்பு நேற்று எருதாட்டம் நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்காக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். அதில் எடப்பாடி செட்டிமாங்குறிச்சியை அடுத்த மோட்டாங்காட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் உத்தரகுமார் (வயது 23) என்பவரும் தனது நண்பர்களுடன் எருதாட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.

விழாவையொட்டி காளை ஒன்று ஆக்ரோ‌‌ஷத்துடன் துள்ளிக் குதித்து ஓடி வந்தது. அப்போது உத்தரகுமார் தனது நண்பர்களுடன் செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டிருந்தார். அந்தநேரம் துள்ளிக்குதித்து வந்த காளை தனது கொம்பால் உத்தரகுமாரை முட்டி தள்ளியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வாலிபர் உத்தரகுமார் பரிதாபமாக இறந்தார்.

ஜல்லிக்கட்டு சம்பங்களில் 4 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News