செய்திகள்
வெங்காயம்

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சி

Published On 2019-12-28 07:23 GMT   |   Update On 2019-12-28 07:23 GMT
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு காரணமாக வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
போரூர்:

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினசரி வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம்.

கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் சீசன் முடிந்து விட்டதால் பெரும்பகுதி வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர், அகமது நகர் ஆகிய பகுதிகளில் இருந்து தான் தற்போது கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.

மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்தது விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.

மேலும் எம்.எம்.டி.சி நிறுவனம் மூலம் எகிப்து, துருக்கி, ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

இதில் எகிப்து, துருக்கி வெங்காயம் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் எகிப்து, துருக்கி வெங்காயத்திற்கு பொதுமக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.

வியாபாரிகளும் எகிப்து, துருக்கி வெங்காயத்தை விற்பனை செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. கடந்த 2 மாதங்களாக உச்சத்தில் இருந்து வந்த வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

கோயம்பேடு வெங்காயம் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ஜான் வர்த்தாலிஸ் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக 50 லாரிகளில் மட்டுமே வந்து கொண்டிருந்த வெங்காயம் இன்று வரத்து அதிகரித்து 60லாரிகளில் விற்பனைக்கு குவிந்துள்ளது. 5 லாரிகளில் வந்து கொண்டிருந்த இறக்குமதி வெங்காயம் இன்று 2 லாரிகள் மட்டுமே வந்துள்ளது.

இன்று மொத்த விற்பனையில் முதல் ரகம் ரூ.80-க்கும் 2-வது ரகம் ரூ.60-க்கும் 3-வது ரகம் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட துருக்கி, எகிப்து வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் குறையும் என்றார்.

மொத்த விற்பனையில் வெங்காயம் விலை குறைந்தாலும் சில்லரை வியாபாரிகள் மற்றும் மளிகை கடைகளில் வியாபாரிகள் விலையை குறைக்கவில்லை. சில்லரையில் ஒரு கிலோ ரூ.90-க்கு தொடர்ந்து விற்று வருகின்றனர்.

மொத்த விற்பனையில் கிலோ ரூ.180 வரை விற்ற சின்ன வெங்காயம் விலையும் தற்போது குறைந்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் (பெரியது) ரூ.130 (சிறியது) ரூ.80-க்கும் சில்லரையில் (சிறியது) ரூ.100 (பெரியது) ரூ.140-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News