செய்திகள்
செல்போன் விற்பனையகம் முன்பு 1 கிலோ வெங்காயம் ரூ.1 மட்டுமே என்று அறிவிப்பு வைத்துள்ளனர்.

மொபைல் நெட்வொர்க் மாற்றினால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம்

Published On 2019-12-19 10:56 GMT   |   Update On 2019-12-19 10:56 GMT
வெங்காயம் விலை உயர்வை பயன்படுத்தி கோவை மாவட்டம் அன்னூரில் ஒரு செல்போன் விற்பனையகம் தனது வியாபாரத்தை சுறுசுறுப்பாக்கியுள்ளது.
அன்னூர்:

பெரிய மற்றும் சிறிய வெங்காயத்தின் விலை கடந்த 2 மாதங்களாக உச்சத்தை எட்டியுள்ளது. தரமான பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இதனால் ஓட்டல்களில் வெங்காய ரோஸ்ட், ஆம்லேட் ஆகியவற்றில் வெங்காயத்தை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வெங்காயத்தின் விலையை குறைக்க எகிப்து வெங்காயம் கொண்டு வரப்பட்டும் விலை இன்னும் குறையவில்லை. இதனால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.

இதை பயன்படுத்தி கோவை மாவட்டம் அன்னூரில் ஒரு செல்போன் விற்பனையகம் தனது வியாபாரத்தை சுறுசுறுப்பாக்கியுள்ளது.

இங்கு வோடாபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட எந்த நெட்வொர்க்கிலிருந்தும், ஏர்டெல் அல்லது ஜியோவுக்கு மாற்றி இணைப்பு பெறுவோருக்கு ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

நெட்ஒர்க் சேவை நிறுவனத்தை மாற்றுவதற்கு எந்த கட்டணமும் வாங்குவதில்லை. 2 நாளில் நெட் ஒர்க் நிறுவனம் மாறி விடுகிறது.

இதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, வெளி சந்தையில் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்கப்படும் பெரிய வெங்காயத்தை ஒரு ரூபாய்க்கு தருகின்றனர்.

சாதாரணமாக தினமும் 2 அல்லது 3 பேர் மட்டும் புதிய இணைப்பு அல்லது நெட்ஒர்க் சேவை நிறுவனம் மாற்றுவதற்கு வருவார்கள். பெரிய வெங்காயம் தருவதால் நேற்று ஒரே நாளில் 20 இணைப்புகள் வழங்கியுள்ளோம் என கடை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News