செய்திகள்
கோப்பு படம்

ஆபாச படம் பார்த்தவரை மிரட்டிய சென்னை வாலிபர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

Published On 2019-12-11 06:45 GMT   |   Update On 2019-12-11 06:45 GMT
இணைய தளங்களில் ஆபாச படம் பார்த்தவரை மிரட்டிய சென்னை வாலிபர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை:

இணைய தளங்களில் ஆபாச படங்களை தேடி பார்ப்பவர்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.

இணையதளங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதவிறக்கம் செய்வதும், அதனை மற்றவர்களுக்கு அனுப்புவதும் குற்றமாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம் என்றும், இணையதளத்தில் ஆபாச வீடியோக்களை பார்த்தால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் கூறினார்.

ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியல் எங்களிடம் தயாராக இருப்பதாகவும் அதனை வைத்து கைது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில ஆபாச வீடியோவை பார்த்த வாலிபர் ஒருவர் நெல்லை போலீசில் சிக்கி இருப்பதாக ஆடியோ ஒன்று வெளியானது. மூன்றடைப்பை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் போன் செய்து பேசும் நபர் தன்னை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு மிரட்டுகிறார்.

“ஏய் தம்பி ஆபாச படம் பார்த்தியா... அது தப்புன்னு தெரியாதா... நாளைக்கு சம்மன் வரும். கோர்ட்டில் போய் அபராதம் கட்டு” என்று போலீஸ் தோரணையிலேயே மிரட்டல் நபர் பேசுகிறார்.

பின்னணியில் போலீஸ் மைக் சத்தமும் கேட்கிறது. இதனால் எதிர் முனையில் பேசும் நபர் பயந்து நடுங்கிக் கொண்டே பேசுகிறார். முதலில் ஆபாச படத்தை பார்க்கவில்லை என்று கூறும் மூன்றடைப்பு வாலிபர் பின்னர் பயந்து ஆபாச வீடியோ இணைய தளத்தில் சென்று 15 நிமிடங்கள் வரையில் பார்த்ததாக ஒப்புக் கொள்கிறார். இதற்கு மேல் பார்க்க மாட்டேன் என்று கெஞ்சுகிறார்.

7 நிமிடங்கள் வரையில் ஓடும் இந்த ஆடியோ வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவி வருகிறது.

இதுபற்றி நெல்லை போலீசார் விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிர காஷ் மீனாவின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து அவர் போலீஸ் என்று பேசி போனில் மிரட்டல் விடுத்த வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மூன்றடைப்பு போலீசார் போலீஸ் போல பேசி போனில் மிரட்டிய வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது பெயர் கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. அவர் மீது மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

385 ஐ.பி.சி. மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் மிரட்டல் நபரான கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவனை கைது செய்ய மூன்றடைப்பில் இருந்து போலீசார் சென்னை வந்துள்ளனர். அவர்கள் கார்த்திகேயனை பிடிப்பதற்காக அவரது போன் நம்பரை வைத்து துப்பு துலக்கி வருகிறார்கள். பெங்களூருக்கும் தனிப்படை விரைந்துள்ளது. இன்று அல்லது நாளைக்குள் கார்த்திகேயன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News