செய்திகள்
மரக்காணத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை - 150 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

Published On 2019-12-01 10:10 GMT   |   Update On 2019-12-01 10:10 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 150 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்த நிலையில் விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, கண்டமங்கலம், முகையூர், அரசூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் பெய்துகொண்டே இருந்தது. காலை 7 மணிவரை இந்த மழை நீடித்தது.

அதன் பின்னர் லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கிநின்றது.

விழுப்புரத்தில் உள்ள கம்பன்நகர், சுதாகர்நகர், வீனஸ் நகர், பாண்டியன் நகர், திருவள்ளுவர் நகர், நாராயணன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்க பாதையிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். உடனே சுரங்க பாதையில் தேங்கியிருந்த தண்ணீர் மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வண்டிபாளையம், நடுக்குப்பம், ஓமிப்பேர், அடசல், கந்தாடு, ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது. சுமார் 11 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இன்றி அந்த பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. நெல், மணிலா, உளுந்து போன்ற பயிர்கள் சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த இந்த பயிர்கள் அனைத்தும் தற்போது பெய்த மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் அந்த பகுதி விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

மேல்மலையனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வளத்தி, அவலூர் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் பலத்த மழை கொட்டியது. இன்று காலை லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது.

இந்த தொடர் மழை காரணமாக அந்த பகுதியில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

தற்போது அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த நெல் பயிர்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் அந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News