செய்திகள்
ஷாமிலி- கலைவாணி

காங்கயத்தில் மாணவியை கிணற்றில் தள்ளி கொலை செய்த அண்ணி

Published On 2019-11-09 04:46 GMT   |   Update On 2019-11-09 04:46 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் மாணவியை கிணற்றில் தள்ளி கொலை செய்த அண்ணியை 4 மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சேமலைவலசு கிராமத்தை சேர்ந்தவர் சீரங்கன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி திருமாயி. இவர்களுக்கு கார்த்தி என்ற மகனும், கலைவாணி (வயது 8) என்ற மகளும் இருந்தனர்.

இந்த நிலையில் திருமாயி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சீரங்கன் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்தார். இதனால் அவரது மகனும், மகளும் சீரங்கனின் தாயார் ஆராளின் பராமரிப்பில் இருந்தனர். கலைவாணி அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். இவர் வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிறுமியின் அண்ணன் கார்த்திக், ஷாமிலி(19) என்பவரை திருமணம் செய்தார். கடந்த 17.7.2019 அன்று வீட்டில் இருந்த கலைவாணி திடீரென்று காணாமல் போய் விட்டார். இதை தொடர்ந்து அவளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் காலை ஊருக்கு அருகேயுள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் கலைவாணி பிணமாக மிதப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைவாணியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். உடல்நலம் பாதிக்கப்பட்ட கலைவாணி கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கலைவாணி மாயமான அன்று ஷாமிலி மட்டும் வீட்டில் இருந்தார். இதனால் பேத்தியின் சாவில் ஷாமிலி மீது சந்தேகம் இருப்பதாக அவரது பாட்டி காங்கயம் போலீசில் புகார் செய்தார்.

ஷாமிலியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கலைவாணியை கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கலைவாணிக்கு உள்ள வலிப்பு நோய்க்கு கணவர் அதிகம் செலவு செய்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் சம்பவத்தன்று கிணற்று அருகே அழைத்துச்சென்று கிணற்றை எட்டிப்பார்க்க சொன்னேன். கலைவாணி எட்டிப்பார்த்தார். அப்போது அவரை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தேன் என்று கூறினார்.

இதையடுத்து ஷாமிலியை போலீசார் கைது செய்து காங்கயம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் கோவை மத்திய சிறையில் ஷாமிலி அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News