செய்திகள்
திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு- கோவையில் உச்சக்கட்ட பாதுகாப்பு

Published On 2019-11-09 04:33 GMT   |   Update On 2019-11-09 04:33 GMT
அயோத்தி வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளதையொட்டி கோவையில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவை:

அயோத்தி வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது. இதனை தொடர்ந்து மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவையில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கோவையில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜூவால் மேற்பார்வையில் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் மாநகரில் துணை ராணுவத்தினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அதிரடிப்படையினர், அதி விரைவு படையினர் என 2 ஆயிரத்து 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை ரெயில் நிலையம், பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, விமான நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவையில் தங்கும் விடுதி, லாட்ஜ்கள், ஓட்டல்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். கோவை மாநகருக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

கோவை மாநகரில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இது தவிர முக்கிய இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

ரெயில்வே டி.எஸ்.பி. அண்ணாத்துரை தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள், 175 போலீசார் கோவை, போத்தனூர், திருப்பூர் ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 2 நுழைவு வாயில்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு பயணிகள் கொண்டு வரும் அனைத்து பொருட்களையும் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கிறார்கள்.

மேலும் அனைத்து நடைமேடைகளிலும் போலீசார் ரெயில்வே பாதுகாப்பு படையினருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போலீஸ் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கொண்டும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை இதற்காக அமைக்கப்பட்டு உள்ளஅறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

போத்தனூர் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி ஆகியோர் தலைமையில் கோவை புறநகர் பகுதிகளில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழக -கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், துடியலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொள்ளாச்சியில் 200 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

திருப்பூரில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் பத்ரி நாராயணன் தலைமையில் 4 உதவி கமி‌ஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நகரின் முக்கிய இடங்களான புஷ்பா ரவுண்டானா, ரெயில் நிலையம், மாநகராட்சி ஜங்‌ஷன், சி.டி.சி. கார்னர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டு உள்ளது.

இது தவிர திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில், ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட இடங்களிலும், கிறிஸ்தவ தேவாலயம், மசூதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாநகர பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடி பேச போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

விடுதிகள், லாட்ஜூகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். சந்தேகம்படும்படி யாராவது தங்கி இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். திருப்பூர் மாநகரில் 12 ரோந்து வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மிட்டல் தலைமையில் புறநகர் பகுதிகளில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தாராபுரம், பல்லடம், உடுமலை, காங்கயம் ஆகிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News