செய்திகள்
திருவண்ணாமலை தாமரை நகரில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்.

திருவண்ணாமலையில் விடிய, விடிய மழை- வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

Published On 2019-10-17 05:25 GMT   |   Update On 2019-10-17 05:25 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது.

வேட்டவலம் சாலையில் வேடியப்பன் கோவில் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. இதனால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து அங்குள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றினர். வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி நின்றதால் விடிய, விடிய குழந்தைகள், பெண்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வேட்டவலம் சாலையில் மறியல் செய்தனர். கால்வாய் சீரமைக்ககோரி கோ‌ஷம் எழுப்பினர். திருவண்ணாமலை டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இதே போல் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரைநகர் 1-வது தெரு, 2-வது தெருவில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. பொதுமக்கள் விடிய, விடிய அவதியடைந்தனர்.

இன்று காலை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மறியல் செய்தனர். இதனால் தண்டராம்பட்டு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். தாமரை நகரில் உள்ள கால்வாய்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டன. கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் உள்ள காந்திநகரில் மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கிருந்த வீடுகளில் தண்ணீர் தேங்கியது.

பொதுமக்கள் அதனை வெளியேற்ற முடியாமல் அவதியடைந்தனர். திருவண்ணாமலை நகராட்சி சார்பில் மழைநீர் புகுந்த பகுதிகளில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீழ்பென்னாத்தூர், வெம்பாக்கம், சேத்துப்பட்டு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மற்ற இடங்களில் சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 66.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.

சாத்தனூர் அணை பகுதியில் லேசான மழை பெய்தது. இன்று காலை அணைக்கு 312 கன அடி நீர் மட்டுமே வந்தது. நீர் மட்டம் 81.35 அடியாக இருந்தது.

பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

திருவண்ணாமலை- 66.4

ஆரணி- 4.2

செங்கம்- 12.4

சாத்தனூர் அணை- 11.6

வந்தவாசி- 14.2

பேரணாம்பட்டு- 16.2

தண்டராம்பட்டு- 9.6

கீழ்பென்னாத்தூர்- 25.6.
Tags:    

Similar News