செய்திகள்
கொள்ளை

குழித்துறையில் கல்வி அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

Published On 2019-09-16 05:34 GMT   |   Update On 2019-09-16 05:34 GMT
குமரி மாவட்டம் குழிததுறையில் கல்வி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை:

குமரி மாவட்டம் குழித்துறை இடைத்தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணசாமி (வயது 50). திருச்செந்தூரில் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வானதி, திருவனந்தபுரத்தில் கணக்கு அதிகாரியாக வேலை பார்க்கிறார்.

இவர்களது மகள் சென்னையில் படிக்கிறார். அவரை பார்ப்பதற்காக கடந்த 9-ந்தேதி வானதி சென்னை சென்றார். லட்சுமணசாமியும் திருச்செந்தூரிலேயே தங்கியிருந்து வேலைபார்த்தார்.

இதனால் லட்சுமண சாமியின் வீடு பூட்டியே கிடந்தது. ஒரு வாரத்துக்கு பின் லட்சுமணசாமி குழித்துறையில் உள்ள வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் நுழைந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டு கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

லட்சுமணசாமியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பீரோவை உடைத்து நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து லட்சுமணசாமி களியக்காவிளை போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

கொள்ளையர்கள் உடைத்த பீரோவின் மேல் பகுதியில் வெள்ளிக் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அவை அப்படியே அங்கு இருந்தன. அவற்றை கொள்ளையர்கள் கவனித்து இருக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது. மேலும் ஒரு தங்க கம்மலும் கொள்ளையர்களின் கண்ணில் சிக்காமல் தப்பியது.

லட்சுமணசாமி வீட்டில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்வி அதிகாரி ஒருவர் வீட்டில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News