செய்திகள்
கோப்புப்படம்

பயங்கரவாதிகள் ஊடுருவல்- ராமேசுவரம் கடல் பகுதியில் 6 கப்பல்கள் தீவிர கண்காணிப்பு

Published On 2019-08-23 08:25 GMT   |   Update On 2019-08-23 08:25 GMT
பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பல்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

ராமேசுவரம்:

பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் சதி செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் தென் கடல் எல்லையான ராமேசுவரத்தில் இருந்து 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் இலங்கை உள்ளது. தற்போது பயங்கரவாதிகள் எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள ராமேசுவரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் கடலோர காவல்படையினர் 3 கப்பல்களிலும், இந்திய கப்பற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் கடல் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே போல் பாம்பன் ரெயில் பாலத்தில் இன்று ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் லாட்ஜில் தங்கி இருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

பயங்கரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து ராமேசுவரம் நகர் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வந்ததை காண முடிந்தது.

Tags:    

Similar News