செய்திகள்
மேட்டூர் அணை

112 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்

Published On 2019-08-16 04:11 GMT   |   Update On 2019-08-16 04:11 GMT
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 111.81 அடியாக உயர்ந்தது. பிற்பகலில் 112 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர்:

கர்காடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் கன மழை பெய்தது.

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து 3 லட்சம் கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இதற்கிடையே மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று கிருஷ்ணராஜாசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 58 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 30 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 10 ஆ யிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 110.33 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 111.81 அடியாக உயர்ந்தது. பிற்பகலில் 112 அடியை எட்டியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 20 அடி உயர்ந்த மேட்டூர் அணை தற்போது நீர்வரத்து குறைந்ததால் மெதுவாக உயர்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்படி நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் க பினி அணையில் இருந்து மேலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News