செய்திகள்
நர்சு அமுதா

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை சம்பவம்- கைதான நர்சு உள்பட 4 பேருக்கு ஜாமீன்

Published On 2019-08-01 07:05 GMT   |   Update On 2019-08-01 07:05 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்கப்பட்டது தொடர்பாக கைதான நர்சு உள்பட 4 பேருக்கு நாமக்கல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மே மாதம் குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்லிமலை மலைவாழ் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தியும், வறுமையில் வாடும் அப்பாவி பெண்களை ஏமாற்றியும் அவர்களிடம் இருந்து பச்சிளம் குழந்தைகள் வாங்கி வசதி படைத்தவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டது. மொத்தம் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்கப்பட்டதாக தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக ராசிபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நர்சு அமுதா என்ற அமுதவள்ளி, இவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் புரோக்கர்கள் பர்வீன்பானு, ஹசினா என்ற நிஷா, லீலா, அருள்சாமி, செல்வி, சேலம் உதவி செவிலியர் சாந்தி, பெங்களூரு அழகு கலை நிபுணர் ரேகா ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார், கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தும்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பான வழக்கு நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நர்சு அமுதா உள்பட அனைவரும் ஏற்கனவே ஜாமீன் கேட்டு 5 முறை மனுதாக்கல் செய்தனர். ஆனால் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் அமுதா, ரவிச்சந்திரன், முருகேசன் உள்ளிட்டோர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லதா சம்பந்தப்பட்ட நர்சு அமுதா மற்றும் இவரது கணவர் ரவிச்சந்திரன், புரோக்கர் லீலா, ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் ஆகிய 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தொடர்ந்து பர்வீன், நிஷா, அருள்சாமி, செல்வி ஆகிய 4 பேர் மீதான ஜாமீன் மனு விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News