செய்திகள்
கார்த்திகேயன்

என் மகன் கொலையாளி அல்ல - சீனியம்மாளின் கணவர் சன்னாசி பேட்டி

Published On 2019-07-31 06:07 GMT   |   Update On 2019-07-31 06:07 GMT
என் மகன் கொலையாளி இல்லை. அரசியல் ரீதியாக பழிவாங்க நினைக்கிறார்கள் என்று சீனியம்மாளின் கணவர் சன்னாசி கூறினார்.
மதுரை:

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மதுரையில் தங்கியுள்ள சீனியம்மாள் அவரது கணவர் சன்னாசி ஆகியோரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.



இந்த நிலையில் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோர் திடீரென தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. சீனியம்மாள் ஏற்கனவே போலீஸ் விசாரணைக்கு பின்னர், படுகொலை சம்பவத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

தற்போது மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சீனியம்மாளிடம் இது குறித்து பேச செல்போனில் தொடர்பு கொண்டபோது, செல்போனை யாரும் எடுத்து பேசவில்லை. ஒரு மணி நேரம் கழித்து அவரது கணவர் சன்னாசி அந்த செல்போனில் பேசினார். அவர் கூறியதாவது:-

நான் பொதுப்பணித் துறையில் அலுவலக சூப்பிரண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். எங்கள் குடும்பம் ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. அரசியல் பின்பலம் கொண்டது. எனது மனைவி சீனியம்மாள், தி.மு.க.வில் மாநில அளவில் பதவியில் இருக்கிறார். முன்னாள் மேயர் கொலை வழக்கில் எங்களை சிக்க வைக்க நெல்லையில் உள்ள தி.மு.க. பிரமுகர்கள் உடந்தையாக இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த படுகொலைகளுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் ரீதியில் பழிவாங்க எங்களை படாதபாடு படுத்துகிறார்கள்.

என் மகன் கொலை குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். ஆனால் அவன் கொலையாளி அல்ல, அவன் 3 பேரை கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. அரசியல் ரீதியில் பழிவாங்க நினைக்கிறார்கள்.

மதுரையில் தங்கி உள்ள சீனியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் வீடு பூட்டிக் கிடக்கிறது. மற்றபடி சீனியம்மாளோ, நானோ விசாரணைக்கு பயந்து தலைமறைவாகவில்லை.

நாளை (வியாழக்கிழமை) நெல்லை செல்கிறேன். பாளை சிறையில் உள்ள என் மகனை சந்தித்து பேச உள்ளேன். எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இதுவரை விசாரணைக்கு வருமாறு என்னிடம் போலீசார் பேசவில்லை. ஒரு வேளை அழைத்தால் விசாரணைக்கு நான் செல்ல தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News