செய்திகள்
கைது

தமிழகம்-ஆந்திராவில் ஆன்லைன் மூலம் ‘கிட்னி’ மோசடி - மதுரை பிரமுகர் கைது

Published On 2019-07-06 06:04 GMT   |   Update On 2019-07-06 06:04 GMT
தமிழகம்-ஆந்திராவில் ஆன்லைன் மூலம் கிட்னி மோசடியில் ஈடுபட்ட மதுரை பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:

மதுரையைச் சேர்ந்தவர் சூரியசிவராம் சிவா. இவர் “கிட்னி பெரடேசன்” என்ற பெயரில் ஆன்லைன் மூலம் கிட்னி தானம் கொடுப்பவர்கள், கிட்னி பெறுபவர்கள் ஆகியோரை உறுப்பினர்களாக சேர்த்து அவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்தது.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள பெரிய மருத்துவமனைகளின் பெயர்களை பயன்படுத்தி இந்த கிட்னி மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக சூரிய சிவராம் சிவா நடவடிக்கைகளை தமிழக மற்றும் ஆந்திர போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த சூரிய சிவராம் சிவாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கிட்னி மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணையில் பரபரப்பு தகவல்களும் கிடைத்துள்ளன. சூரிய சிவராம் சிவா தனது ஆன்லைன் விளம்பரத்தில் ரூ.15 ஆயிரம் பணம் கட்டி பதிவு செய்து கொண்டால் உடனடியாக கிட்னி தானம் வழங்கப்படும் என்று தெரியப்படுத்தி இருக்கிறார்.

மேலும் கிட்னி தானம் கொடுப்பவர்களுக்கும் லட்சக்கணக்கில் பணம் தரப்படும் என்றும் ஆசை வார்த்தைகள் காட்டியதாகவும் தெரிகிறது.

கிட்னி தானம் கேட்பவர்களிடம் மருத்துவ பரிசோதனை மற்றும் “டோனர் பண்டு” என்ற பெயரில் லட்சக்கணக்கில் பேரம் பேசுவதும் அவருக்கு கைவந்த கலையாக இருந்துள்ளது.

அவரது மோசடி வலையில் ஏராளமான மக்கள் விழுந்துள்ளனர். அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி இருக்கிறார்.

இப்படி சில மாத இடைவெளியில் புதுப்புது வாடிக்கையாளர்களை கவர்ந்து பணம் பறிப்பது தான் இவரது வாடிக்கையாக இருந்துள்ளது.

தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளில் ஆன்லைன் மூலம் சூரிய சிவராம் சிவாவிடம் ஏமாந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சில புகார்களும் குவிந்து வருகின்றன.

Tags:    

Similar News