செய்திகள்

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் என்ஜினீயர் மனைவி தவறவிட்ட 2 பவுன் செயின் மீட்பு

Published On 2019-06-17 13:33 GMT   |   Update On 2019-06-17 13:33 GMT
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த என்ஜினீயர் மனைவி, தவறவிட்ட 2 பவுன் செயினை தஞ்சை ரெயில்வே போலீசார் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்:

திருச்சி காட்டூர், ராஜப்பா நகரை சேர்ந்தவர் சிவராம் (வயது 35) இவர் தூத்துக்குடியில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜீனியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா (32). இருவரும் தூத்துக்குடியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆறுமுக நேரியில் இருந்து சிவராமும், லாவண்யாவும் திருச்சி வந்தனர். அங்கு இறங்கியதும் லாவண்யா அணிந்திருந்த 2 பவுன் செயினை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அவர் இதுபற்றி கணவர் சிவராமிடம் தெரிவித்தார். அதற்கு ரெயில் புறப்பட்டு சென்றுவிட்டது.

இதுபற்றி சிவராம் ரெயிலில் பாதுகாப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் ரெயிலில் தஞ்சை சென்றதும். அங்கு ரெயில்வே பாதுகாப்புபடை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் லாவண்யா பயணம் செய்த முன்பதிவு பெட்டியில் ஏறி குறிப்பிட்ட இருக்கையை சோதனை செய்தனர். அப்போது இருக்கைக்கு அடியில் செயின் விழுந்து கிடப்பது தெரியவந்தது. அதனை மீட்ட போலீசார் சிவராமுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் இன்று தஞ்சை வந்த ரெயில்வே பாதுகாப்புபடை சப்-இன்ஸ்பெக்டர் மனோகரனிடம் இருந்து லாவண்யா தவறவிட்ட 2 பவுன் செயினை பெற்று கொண்டார்.

அப்போது புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்து நகையை மீட்ட ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் பணியை சிவராம் பெரிதும் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News