செய்திகள்

நகைக்கடை அதிபர் வீட்டில் 170 பவுன் கொள்ளை - மர்ம மனிதர்கள் துணிகரம்

Published On 2019-04-01 09:02 GMT   |   Update On 2019-04-01 09:02 GMT
மதுரையில் நகைக்கடை அதிபரின் வீட்டை உடைத்து 170 பவுன் நகைகளை கொள்ளையடித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
மதுரை:

மதுரை சின்னசொக்கிக் குளத்தைச் சேர்ந்தவர் சங்கர். நகை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு தல்லாகுளம் கோகலே ரோட்டில் வீடு உள்ளது. அந்த வீட்டில் பீரோ மற்றும் லாக்கர்களில் நகைகளை வைத்து தொழில் செய்து வருகிறார்.

கடந்த 27-ந் தேதி சங்கர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இதனால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தல்லாகுளம் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பழனி என்பவர், சங்கருக்கு போனில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சங்கர், எஸ்.எஸ்.காலனியில் வசிக்கும் தனது உறவினர் வெங்கடேஷ் என்பவரிடம் தெரிவித்து வீட்டிற்கு செல்லும்படி கூறினார்.

அதன்படி வெங்கடேஷ் சென்று பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பீரோ மற்றும் லாக்கர்கள் திறந்து கிடந்தன. இதனால் நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து தல்லாகுளம் போலீசில் வெங்கடேஷ் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, லாக்கர் மற்றும் பீரோக்கள் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் மோப்ப நாய் மூலம் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக மிளகாய் பொடியை தூவி இருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் வெளியூரில் இருந்து சங்கரும் ஊருக்கு திரும்பினார். பீரோ மற்றும் லாக்கர்களில் 170 பவுன் நகைகள் இருந்ததாக சங்கர் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News