செய்திகள்

வியாசர்பாடியில் பஸ்தினம் கொண்டாடிய 5 மாணவர்கள் கைது

Published On 2019-01-23 06:43 GMT   |   Update On 2019-01-23 06:43 GMT
வியாசர்பாடியில் பஸ்தினம் கொண்டாடிய 5 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

சென்னை வியாசர்பாடியில் அம்பேத்கர் கலைக் கல்லூரி உள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் கல்லூரி திறக்கப்பட்டது. மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர்.

தற்போது பஸ்தினம் கொண்டாட ஐகோர்ட்டு தடை விதித்துள்ளதால் மாணவர்கள் பஸ்சை மறித்து பொங்கல் தினம் என்ற பெயரில் பஸ் தினம் கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக கல்லூரியை விட்டு வெளியே வந்து எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் திரண்டனர்.

அப்போது தங்கசாலையில் இருந்து செங்குன்றம் செல்லும் மாநகர பஸ் வந்தது. அந்த பஸ்சை மாணவர்கள் வழி மறித்தனர். பின்னர் டிரைவரை கீழே இறக்கி விட்டனர். பஸ்சின் முன்புறம் மாலை அணிவித்தனர். அதன்பிறகு மாணவர்கள் பஸ்சின் மேற்கூரை மீது ஏறி டிரைவரை பஸ்சை எடுக்குமாறு கூறினார்கள். டிரைவர் பஸ்சை ஒட்டிய போது மாணவர்கள் பஸ்சின் மேற்கூரையில் பயணம் செய்தனர்.

மாணவர்கள் பஸ்தினம் கொண்டாடுவது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எம்.கே.பி.நகர் போலீஸ் உதவி கமி‌ஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் காளிராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஓடும் பஸ்சை தடுத்து நிறுத்தினார்கள்.

மாணவர்களை பஸ்சில் இருந்து கீழே இறக்கினார்கள். அப்போது மாணவர்கள் நாங்கள் பஸ் தினம் கொண்டாடவில்லை. பொங்கல் தினம் கொண்டாடுகிறோம் என்றனர்.

அதை போலீசார்ஏற்றுக் கொள்ளவில்லை. பஸ்சை மறித்து பஸ் தினம் கொண்டாடக் கூடாது என்று மாணவர்களை எச்சரித்தனர். பின்னர் அவர்களை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தடையை மீறி பஸ்தினம் கொண்டாடியது தொடர்பாக எம்.கே.பி.நகர் போலீசார் விசாரணை நடத்தினாரக்ள். பஸ் தினம் கொண்டாடியது தொடர்பாக அம்பேத்கார் கலைக்கல்லூரியில் படிக்கும் செங்குன்றத்தை சேர்ந்த இர்பான்பாஷா, அப்துல் அக்கீம், மணலியை சேர்ந்த பிரவீன், ஆவடியை சேர்ந்த மோகனகுமார், வியாசர்பாடியை சேர்ந்த நவீன் ஆகிய 5 மாணவர்களை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

5 மாணவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மற்ற மாணவர்கள் அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடாமல் இருக்க அம்பேத்கர் கல்லூரியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் மாணவ-மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியேறினார்கள்.

Tags:    

Similar News