செய்திகள்

மணப்பாறையில் அரசு ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்- நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

Published On 2018-11-23 06:28 GMT   |   Update On 2018-11-23 06:28 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அரசு ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவத்தால் நோயாளிகள் பீதி அடைந்தனர். #ManapparaiGovtHospital
மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும் 1,200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 150-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு மையத்திற்கு ஒரு போன் வந்தது. அதனை ஊழியர் ஒருவர் எடுத்து பேசினார். எதிர் முனையில் பேசிய நபர், பெயர் விவரம் எதையும் கூறாமல், மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர், உடனே மருத்துவமனை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து மருத்துவமனை அதிகாரி (பொறுப்பு) வில்லியம் ஆண்ட்ரூஸ் மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது போனில் பேசிய மர்ம நபர், வேண்டுமென்றே மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் தெரிவித்து விட்டு போனை துண்டித்துள்ளது தெரியவந்தது. அந்த நபர் யார், எதற்காக இப்படி செய்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் பேசிய போன் நம்பரை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். பரபரப்பு நிலவியதால், சிலர் சிகிச்சை பெறாமல் அங்கிருந்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்ததையடுத்தே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். #ManapparaiGovtHospital
Tags:    

Similar News