செய்திகள்

திண்டுக்கல்லில் நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவினர் ரகளை - நாற்காலிகள் வீச்சு

Published On 2018-11-13 08:20 GMT   |   Update On 2018-11-13 08:20 GMT
திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் நாற்காலிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK #AdministratorsMeeting
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை வகித்து பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை பார்த்து கூட்டுறவு சங்க தேர்தலில் முக்கியமானவர்களுக்கு பதவி கொடுத்து விடுகிறீர்கள், சத்துணவு துறையில் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை கிடைத்துவிடுகிறது. ஆனால் கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. நாங்கள் வேலை செய்வதற்கு மட்டும்தானா? எங்களுக்கு பதவிகள் கிடைக்காதா? என பேச தொடங்கினார்.

உடனே அதிர்ச்சி அடைந்த மருதராஜ், இதுபோன்ற தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். ஏதேனும் பேச வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறலாம் என தெரிவித்தார்.

இருந்தபோதும் அவர் தொடர்ந்து பேசியவாரே இருந்தார். அவரை மற்ற நிர்வாகிகள் சமாதானம் செய்ய முயன்றனர். இதனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் நாற்காலிகளை வீசி மோதிக்கொண்டனர்.

உடனடியாக தகராறில் ஈடுபட்டவர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கூட்டம் அமைதியாக நடந்தது.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், இடைத்தேர்தலில் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியை பெற வேண்டும். எக்காரணம் கொண்டும் நம்மில் வேற்றுமையை ஏற்படுத்தி வெற்றி வாய்ப்பை தவற விடக்கூடாது என்று பேசினார். #ADMK #AdministratorsMeeting

Tags:    

Similar News